Jul 23, 2019 / J News (Youtube)
28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு ஏரியை பசுமைப் பூங்காவாக மாற்றி பொதுமக்களுக்கு அளிக்கப் படுமென மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பருத்திப்பட்டு ஏரியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 89 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் பொது மக்கள் நடை பயிற்சிக்காக 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்கூடம் சிறுவர்கள் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திறந்தவெளி அரங்கமும், சிற்றுண்டி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்குவதற்கு ஏரியின் உள்ளே இரண்டு தீவுகள் அமைக்கப்பட்டுள்ளது. குப்பை மேடாக காட்சியளித்த பருத்திப்பட்டு ஏரி தற்போது சுற்றுலா தலமாக மாறியிருப்பது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒய்வு நேரத்தில் அமைதியான சூழலில் மனதிற்கு உற்சாக மூட்டும் அளவில் இருப்பதாகவும், எங்கேயும் இல்லாத அளவில் வெளிநாட்டுப் பறவைகளை காண முடிவதாகவும், ஒய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடக்கூடிய இந்த இடத்தில் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர் பொது மக்கள்.
தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க தண்ணீர் சுத்தீகரிக்கப் பட்டு தூய்மைப் படுவதாகவும், விரைவில் படகுப் போக்குவரத்து தொடங்கி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர படுமென அமைச்சர் மா.பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பருத்திப்பட்டு ஏரி பசுமைப் பூங்காவை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் பதினைந்தாவது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்ட பிறகு திறந்து வைத்த முதல் பசுமைப் பூங்கா பொது மக்கள் கனவுகளில் ஒன்றாகும்.