Jan 04, 2021 / Malai Malar
எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணி 118.9 கி.மீ தூரத்திற்கு 3 வழித் தடங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சிப்காட் ஆகிய வழித் தடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையேயான திட்டப் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விரைவில் இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் செயற்கைகோள் நகரமாக திருமழிசையை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.
எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-
பூந்தமல்லி-திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை இணைக்க அரசு முடிவு செய்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை 6 மாதத்தில் தயாரித்து முடிக்க வேண்டியுள்ளது..
இந்த திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள், எந்த வழியாக செயல்படுத்தினால் போக்குவரத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும், இத்திட்டத்தை செயல்படுத்த கட்டுமான பணிகள் அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்யும் என்றனர்
2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் பணிமனை அமைகிறது. தற்போது திருமழிசையில் பணிமனை அமைந்தால் ரெயில்களை பராமரிக்க வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.திட்ட அறிக்கை தயாரித்த பின் அரசிடம் கொடுக்கப்படும். நிதி மற்றும் மற்ற தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து அரசு முடிவு செய்த பிறகு பணிகள் தொடங்கப்படும். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்த சிறிது காலம் தேவைப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருமழிசையில் புறநகர் பஸ்நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் அமைவதால் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.பூந்தமல்லி-திருமழிசை விரிவாக்க திட்டம், நசரேத்பேட்டை, செம்பரம்பாக்கம் வழித்தடத்தில் செயல்படுத்தப்படுவதால் அந்த பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதாக எதிர் காலத்தில் சென்று வர முடியும்.இந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மெட்ரோ ரெயில் திட்டத்தால் சாலை போக்குவரத்து குறையும் என்று கருதப்படுகிறது